Thursday 24 November 2016

காலையில் பொழிந்த மழை வெள்ளமாகத் தேங்கிநின்ற ரவிவீட்டு முற்றத்தைப் பார்த்துவிட்டு, சைக்கிள் பெல்லையடித்தான் வேந்தன்.

"அட வேந்தனே...  உள்ள வாவன் தம்பி..."-ரவியின் அக்கா வதனி கதவருகில் நின்று கூப்பிட்டாள்.

எனக்கும் வரத்தான் விருப்பமக்கா... வீட்டுக்குள்ள பத்திரமா வெச்சிருக்கிற படகை இஞ்ச அனுப்புங்கோ ஏறி வாறன்..."

"உனக்கு நக்கல் கூடிப்போச்சுது...ஓரமா நட.. சறுக்காது... "

"பொறுங்கோ... அம்மா உங்களிட்ட குடுக்கச்சொல்லி நாலு புத்தகம் தந்துவிட்டவ... எடுத்துக்கொண்டு வாறன்..."

வெள்ளத்துக்குள் வழுக்கிவிடாமல் மெதுவாக நடந்துவந்து போர்ட்டிக்கோவில் போட்டிருந்த கயிற்று மிதிவடியில் கால்களைத் துடைத்துக்கொண்டான் வேந்தன்.

"ஏனக்கா வளவுக்குள்ள இவ்வளவு வெள்ளம்...?"

"கனநாளாக எங்கட வீட்டை பீச் ஆக்கவேணுமெண்டு ஆசை.. அதான் தண்ணி சேர்க்கிறம்..."

"அக்கா.. உங்களுக்கும் நக்கல் கூடித்தான் போச்சுது..."- வாய்விட்டுச் சிரித்த வேந்தனைப் பார்த்துப் புன்னகைத்தாள் வதனி.

"என்ன தம்பி.. இந்தநேரத்தில வந்திருக்கிறாய்... இப்பத்தான் தேத்தண்ணி போட்டனான்.. உனக்கும் கொண்டுவாறன் கதிரையில வந்து உட்கார்..."- வதனி உள்ளே சென்றுவிட,

கையில் வைத்திருந்த புத்தகங்களடங்கிய பையை மேசையில் வைத்துவிட்டு மறுபடி ஜன்னலுக்கு வெளியில் தெரிந்த வெள்ளத்தைப் பார்த்தவனுக்குள், சிலவருடங்களுக்கு முந்தைய ரவிவீடு நினைவில் வந்தது.

அப்போதெல்லாம் ரவியின் வீட்டுமுற்றம் வகைவகையான குரோட்டன்களும், பூச்செடிகளுமாக நிறைந்து நந்தவனமாகக் காட்சியளிக்கும். பின்வளவில் வாழைகள் வரிசைவரிசையாக, வகைவகையாக.

வேந்தனும் ரவியும் நினைவுதெரிந்த நாளிலிருந்தே நண்பனாகிவிட்டவர்கள். சிறுவர்களின் நட்பு இருவீட்டினரையும் ஒட்டுறவாகப் பழகவைத்துவிட்டது. வேந்தனுக்கு ரவிவீட்டுக்குப் போவதென்றாலே தனிச்சந்தோசம். கமலம் அன்ரியின் பலகாரவகைகளும், வதனி அக்காவின் பாசமும், எல்லாத்துக்கும் மேல அந்தவீட்டுப் பூந்தோட்டமும் அவனைக் கவர்ந்திருந்தன.

அதேபோல ரவிக்கும் வேந்தனின் அம்மா தேவியின் புத்திசாலித்தனமான பேச்சு மிகவும் பிடிக்கும். புத்தகங்கள் வாசிப்பதும், "இந்தப்புத்தகத்தை வாசித்துப்பார்.. உலகம் எங்க போகுதெண்டு தெரியும்" என்றுரைத்து அவர் நீட்டும் புத்தகங்களை வாசிப்பதென்றால் ரவிக்கும், வதனிக்கும் ஈடுபாடு அதிகம்.

எல்லாம் நாட்டுப்பிரச்சனை தொடங்கும் வரைக்கும் தான்.

கமக்காரரான வதனி, ரவியின் அப்பா தோட்டவேலையில் ஈடுபட்டிருக்க ஹெலியில் வந்த ராணுவத்தினர் அவரைச் சுட்டுக்கொன்றபின் நிலைமை மாறிவிட்டது.

வதனி பொழுதுபோக்காகப்பயின்ற தையல்கலையை நம்பி குடும்பம் வாழத்தொடங்க, ஓஎல் படித்துக்கொண்டிருந்த ரவி ஒருநாள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதையறிந்ததும் வேந்தனின் அப்பா, அவனைக் கொழும்புக்கு ரயிலேற்றிவிட்டார்.

ஊரை, நண்பன்குடும்பத்தைப் பிரியமுடியாமல் அழுதுகொண்டே பயணித்தது இன்றுபோல நினைவுக்கு வர, வேந்தன் ஜன்னலிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

"ஹேய்.. ஏன் கண் கலங்கிக்கிடக்கு...?"- தேனீர்க்கோப்பையுடன் வந்த வதனி கலங்கலைக் கவனித்துவிட்டதையுணர்ந்து வெட்கத்துடன் விழிகளைத் துடைத்துக்கொண்டான் வேந்தன்.

"ஒண்டுமில்லையக்கா... பழசையெல்லாம் நினைச்சுப்பார்த்தன்..."-

சிறு பெருமூச்சு வெளிப்பட வதனி சொன்னாள். "என்னெல்லாம் நடக்கவேணுமோ அதெல்லாம் நடந்துதானே தீருமடா..."

"அன்ரி எங்க போட்டா அக்கா... அவவையும் பார்க்கிறதுக்காகத்தான் வந்தனான்..."

"ரவி எங்கயெண்டு இன்னும் தெரியாமல்தானே தவிச்சுக்கொண்டிருக்கிறம்... இருக்கிறானா இல்லையா எண்டே தெரியேல்லை.. அம்மா இப்ப எல்லாம் கோவில்களே கெதியெண்டு கிடக்கத் தொடங்கிற்றா... "-

"கவலைப்படாதேங்கோ அக்கா... அவனுக்கு ஒண்டும் ஆகியிருக்காது... "- வெளியில் ஆறுதல் சொன்னாலும் வேந்தனுக்குள்ளும் கலக்கம் தான்.

இறுதிச் சண்டைக்குப்பிறகு ரவியைப்பற்றி எந்தத்தகவலுமே இல்லாமல் போகவே, எங்கேயெல்லாமோ தேடிக் களைத்துவிட்டனர் ரவிவீட்டார். ஆண்துணையில்லாமல் அவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவுமில்லை.

வதனியின் நிலையை நினைத்தாலும் வேந்தனுக்குக் கவலைதான். அவளுக்கென்று மாப்பிள்ளை தேடவோ, அதற்கான ஏற்பாடுகளை பொறுப்பெடுத்துச் செய்யவோ யாருமில்லாத சூழ்நிலை. வேந்தனின் அம்மா தான் அவ்வப்போது அவளைப்பற்றிக் கவலைப்படும் ஒரே ஆள். தெரிந்தவர்களிடம் மாப்பிள்ளைகளை விசாரித்துக்கொண்டிருந்தாள்.

"நீ தேத்தண்ணியைக்குடி.. ஆறுது.. எப்ப திரும்பக் கொழும்புக்குப் பயணம்...?"-

"நாளண்டைக்கு அக்கா... ஒவ்வொருமுறையும் இங்க வந்துபோகேக்கை எனக்குள்ள நான் பிழை செய்துபோட்டனெண்டு இருக்கு... "

"நீ என்ன பிழை செய்தனி வேந்தா... ?"

"ரவிக்கிருந்த நாட்டுப்பற்றும், அக்கறையும் எனக்கில்லாமல்தானே அப்பா போகச்சொன்னவுடனேயே கொழும்புக்குப் போய்ட்டன்..."

"அப்பிடியில்லையடா...ரவி சரீரத்தால போராட்டத்தில சேர்ந்தால், நீ படிச்சு, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சம்பளத்தில ஒருபகுதியை இயக்கத்துக்குத்தானே குடுத்துக்கொண்டிருந்தனி... அதுவும் போராட்டம் தான்ரா... அதுவுமில்லாமல் ரவின்ரை இடத்தில உன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறம் அம்மாவும், நானும்.. "- ஆறுதலாகக் கையைப்பிடித்திருந்த வதனியை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் கண்கள் கலங்க,  வலதுகையில் வைத்திருந்த தேனீர்கோப்பையைலிருந்ததை மடக்கென்று குடித்துக் கோப்பையை வதனியிடம் கொடுத்தவன்,

"அக்கா... கொஞ்சம் பொறுங்கோ இப்ப வாறன்.... "- என்றபடி வெள்ளத்துக்குள்ளால் நடந்து சைக்கிளை எடுத்தான்.

"அடுத்த சில நிமிடங்களில் சைக்கிள் கேரியரில் பக்குவமாக வைத்துக் கட்டப்பட்டிருந்த பூச்சாடியொன்றுடன் வந்து இறங்கினான் வேந்தன்.

"அக்கா... உண்மையிலேயே என்னை ரவியின் இடத்தில் வைத்திருந்தால், வளவில் வெள்ளம் வடிஞ்சவுடனேயே, இந்தப்பூங்கன்றை நடவேணும் நீங்கள். பழையமாதிரி உங்கட வாழ்க்கை மீளவேணுமக்கா... "

"சரி வேந்தன்....."- நெகிழ்ந்துவிட்ட குரலில் வதனி சொல்லிவிட்டு பூச்சாடியை வாங்கிக்கொண்டாள்.

"அடுத்தமுறை நான் இங்க வர்ர நேரம் உங்கட வாழ்க்கையில் நல்லது நடந்திருக்கவேணும்..நான் எதுசெய்தாலும் அது உங்கடை நல்லதுக்கெண்டு நம்பினால் சரி..."

"அவ்வளவு பெரியாளாகிட்டியோ நீ.... உன்னை நம்பாம வேற யாரை நம்பப்போறன் சொல்லு...."

"இதுபோதுமக்கா....நான் போய்ட்டு வாறன் நிறைய வேலையிருக்கு எனக்கு...."

வதனியிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வெள்ளத்துக்குள் இறங்கியவனுக்குள், கொழும்பில் தன்னுடன் வேலைசெய்யும் வரதன் அண்ணை பளிச்சிட்டார். இன்னும் கல்யாணமொண்டும் சரிவராமல் சலித்துப்போய் இருப்பவரை வதனிக்குப் பேசி முடித்துவிடலாமே என்ற அற்புதமான யோசனை வரவே, அப்போதே அலைபேசியை எடுத்து வரதனின் நம்பரை டயல்செய்தான்.

அவனது மனதைப்போலவே அதுவரைக்கும் மப்பாகக் கிடந்த வானமும் வெளுத்துக் கதிரவன் தலியைக் காட்டினான்.

- அபிராமி

8 comments:

  1. வலைப்பூவுக்கு இனிய வரவேற்புகள் அபிராமி!

    கதையின் கனம் அதன் முடிவில் இலகுவானது.வீட்டுக்கு வீடு வாசப்படியாகா நம் ஊரில் இப்படி பலர் உண்டு. நல்ல கருத்தை சொன்னீர்கள்.

    தொடர்ந்து எழுதுவதோடு உங்கள் பேஸ்புக் கதைப்பகிர்வுகளையும் இங்கே பகிரலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிஷா முதல்பதிவில் முதன்முதலில் உங்கள் கமெண்ட்! மிக்க மகிழ்ச்சி!
      ஆமாம் அதிலிருந்து கதைகளை இங்கேயும் பதிவேன்.

      Delete
  2. aathadi evlo periya kathai...... appadi full ah padichi whatsapp la oru voice note vasathiya irukkum... puthu valai pakkam. puthu kathai kalakuringa....

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்க.. அந்தக் கண்ணால வாசிக்கிறதுக்குமா சோம்பல்??
      வாசியுங்க.. கருத்துச் சொல்லுங்க..
      வாழ்த்துக்கு நன்றி ஜி

      Delete
  3. அன்பு ஆழமானது
    எந்த எதிர்பார்ப்பும்
    இல்லாததே தூயநட்பூ..
    வலைப்பூ அருமை
    அபிராமி சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.. :)
      இங்கு வருகைதந்து கதையை வாசித்ததற்கு!

      Delete
  4. இலங்கைத் தமிழ் படிக்க சுவாரசியம்..வலைப்பூ மலர்ந்து மணம் பரப்ப வாழ்த்துக்கள

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி டொக்டர் :D
      தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வழங்கி இந்த வலைப்பூவை மாலையாக்குங்க..

      Delete